பனிப்போரின் யுத்த களமாக உக்ரைன்! (பகுதி -4)
உக்ரைன் மறுபங்கீட்டிற்கான ஏகாதிபத்திய நாடுகளின் பனிப்போரை உள்நாட்டு போராக மாற்றி சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதே உக்ரைன் விடுதலைக்கான ஒரே வழி!
(பகுதி-3 ன் தொடர்ச்சி)
உக்ரைன் போர் பற்றிய மோடி ஆட்சியின் நிலைபாடு
உக்ரைன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்புப் போரைக் கண்டித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தபோது, இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சீனாவுடன் வெளிநடப்பு செய்தது. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தையும் மீறி வெளிநடப்பு செய்தது மட்டுமின்றி ரசியா மீது கண்டனம் தெரிவிக்கவும் மறுத்துவிட்டது. பேச்சுவார்த்தை மூலம் போர் முடிவிற்கு வரவேண்டும் என பொதுவாகப் பேசுகிறது மோடி ஆட்சி. அமெரிக்காவின் புதிய காலனியாக உள்ள இந்தியா, பல பத்தாண்டுகளாக ரசியாவுடன் ராணுவத் தளவாட வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இராணுவத்திற்குத் தேவையான போர் ஆயுதங்களை இறக்குமதி செய்து (மொத்த இறக்குமதியில் சுமார் 50% - 70%) வருகிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ரசியாவில் இருந்துதான் அதிகளவு ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. இந்திய தரகு முதலாளிகளின் நலன்களிலிருந்து அமெரிக்கா, ரசியா இரண்டையும் சார்ந்து நிற்க முயல்வதால் மோடி ஆட்சி உக்ரைன் விசயத்தில் நடுநிலை வேடம் போடுகிறது.
மோடி ஆட்சியின் நிலைப்பாட்டை ரசியா வரவேற்றுள்ளது. அமெரிக்கா கண்டித்துள்ளது. ஆகவே உக்ரைன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்புப் போரை மோடி கும்பல் மறைமுகமாக ஆதரிக்கிறது. இதனை அடுத்து ரசியாவின் போர் விமானங்கள் (குறிப்பாக எஸ்-400) வாங்குவதற்கு அமெரிக்கா இந்தியா மீது காட்சா (CAATSA) தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்திய பெரும்தரகு முதலாளிகளின் நலன்களிலிருந்து நடுநிலை வாதம் பேசும் மோடி ஆட்சி அமெரிக்காவிற்குத் தலையையும் ரஷ்யாவிற்கு வாலையும் காட்டுகிறது. ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையடைவதால் இந்தியத் தரகு முதலாளிகளின் பேரம் பேசும் ஆற்றல் கூடி அதனால் தரகு முதலாளிகள்தான் இலாபம் அடைவார்களே ஒழிய மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. சொல்வதெனில் போரினால் எழும் நெருக்கடியின் சுமைகள் மக்கள் மீதுதான் சுமத்தப்படவுள்ளன.
உக்ரைனில் மாட்டிக்கொண்ட இந்திய மாணவர்களை மீட்பதில் கூட மோடி ஆட்சி அக்கறை காட்டவில்லை. ஏர்-இந்தியாவை டாடாவிற்கு விற்று விட்டுவிட்டதால் டாடா நிறுவனம் கட்டணத்தை இரு மடங்காக்கி போரிலும் லாபம் பார்க்கிறது. சில ஆயிரம் மாணவர்களே மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் (மொத்தம் சுமார் 25,000 மாணவர்கள்) பல ஆயிரம் பேர் உக்ரைனில் தவித்து வருகின்றனர்.
உக்ரைன் போர் குறித்த பாட்டாளி வர்க்க நிலைப்பாடும் திருத்தல்வாத நிலைப்பாடும்
யுத்தம் என்பது அரசியலின் வேறு வழியிலான அதாவது வன்முறை வழியிலான தொடர்ச்சியே என்கிறது மார்க்சியம். யுத்தம் அரசியலாகவும், யுத்தம் தானே ஒரு அரசியல் நடவடிக்கையாகவும் விளங்குகிறது. அரசியல் அதன் வழக்கமான வழிகளில் மேற்கொண்டு முன்னேற முடியாத ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு வளர்ச்சியடைந்ததும் அதன் பாதையிலுள்ள தடைகளை நீக்குவதற்காக யுத்தம் வெடிக்கிறது. அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்; யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல் என்கிறார் மாவோ.
பிரெஞ்சு முடியாட்சியை வீழ்த்துவதற்கான பிரெஞ்சு பாட்டாளி வர்க்க அரசியலின் தொடர்ச்சியே பிரஞ்சுப் போராக - புரட்சியாக வெடித்தது. உலகை மறுபங்கீடு செய்வது அதன் மூலம் உலக மேலாதிக்கம் அடைவது எனும் ஏகாதிபத்திய நாடுகளுடைய அரசியலின் தொடர்ச்சியே முதல் உலகப் போராக வெடித்தது. ஜார் ஆட்சியை வீழ்த்துவதற்கான ரசிய பாட்டாளி வர்க்க அரசியலின் தொடர்ச்சியே அன்று ரசியப் போராக - புரட்சியாக வெடித்தது.
யுத்தம் பற்றிய நமது அணுகுமுறை யுத்தத்தின் வர்க்கத் தன்மையைப் பொறுத்து அமைகிறது. அதாவது லெனின் கூறுவது போல "எந்த வரலாற்றுச் சூழ்நிலைமைகள் யுத்தத்திற்கு வழிவகுத்துள்ளன; எந்த வர்க்கங்கள் யுத்தத்தைத் தொடுத்துள்ளன; எந்த இறுதி நோக்கங்களுக்காகத் தொடுத்திருக்கின்றன" என்பதால் அமைகிறது. (போரும் புரட்சியும் LCV 24 P 398)
நிலப்பிரபுத்துவப் பிற்போக்கை எதிர்த்து புரட்சிகர முதலாளித்துவ வர்க்கம் முதலாளித்துவப் புரட்சி சகாப்தத்தில் நடத்திய போர்களை தேசியப் போர்கள் எனவும், நீதியான போர்கள் எனவும், தாய்நாட்டைக் காக்கும் தற்காப்பு போர்கள் எனவும் மார்க்சும் எங்கெல்சும் கூறி அவற்றை ஆதரித்தனர். முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறிய போது முதலாளித்துவ வர்க்கம் தனது தேசியத் தன்மையை இழந்து, முற்போக்குத் தன்மையை இழந்து பிற்போக்கானதாக எதிர்புரட்சிகரமானதாக மாறிவிட்டது. பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சகாப்தம் துவங்கிவிட்டது. ஆகவே இந்த சகாப்தத்தில் ஏகாதிபத்தியங்கள் நடத்தும் போர் காலனிகளை மறுபங்கீடு செய்வதற்கான அநீதியான போர் எனவும், அதைத் தாய்நாட்டுப் பாதுகாப்பு போர் - தற்காப்பு போர் என்று கூற முடியாது எனவும், இந்த அநீதிப் போரை பாட்டாளி வர்க்கப் புரட்சி மூலம் நீதிப் போராக மாற்ற வேண்டும் எனவும் போர் குறித்த மார்க்சிய நிலைப்பாட்டை ஏகாதிபத்திய சகாப்தத்திற்கு ஏற்ப லெனின் வளர்த்தெடுத்தார்.
முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறிவிட்ட பிறகு; அவற்றால் நிதி மூலதன ஏற்றுமதி மற்றும் காலனிய மறுபங்கீட்டுப் போர்கள் இல்லாமல், தேசங்களை ஒடுக்காமல் வாழ முடியாது எனும் நிலைமைகள் உருவாகிவிட்ட பிறகு, அவை தேசியப் போர் நடத்தவும், ஜனநாயகப் புரட்சிக்கு தலைமை தாங்கவும் தகுதி இழந்துவிட்டன. பாட்டாளி வர்க்கமே அவற்றிற்கு தலைமை தாங்கும் தகுதி வாய்ந்த வர்க்கமாக மாறிவிட்டன.
முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறிய இந்த நிகழ்வுப் போக்கை காண மறுத்த அல்லது காண விரும்பாத காவுத்ஸ்கி உள்ளிட்ட இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகள், ஏகாதிபத்திய சகாப்தத்திலும் முதலாளிய வர்க்கம் முற்போக்கு பாத்திரம் வகிக்க முடியும் எனும் கருத்தாக்கத்தில் இருந்து முதல் உலகப்போரில் ஏகாதிபத்திய தாசர்களாக மாறினார்கள். காவுத்ஸ்கியின் வாரிசுகளான திருத்தல்வாதிகள் இன்றும் அதே கண்ணோட்டத்தில் இருந்து கொண்டு ரசிய-சீன ஏகாதிபத்திய தாசர்களாக விளங்குகிறார்கள். லெனினியத்திற்கு துரோகம் இழைக்கிறார்கள்.
யுத்த எதிர்ப்பு எனும் பேரில் சமாதானவாதிகளும் அராஜகவாதிகளும் பாட்டாளி வர்க்கத்தின் முற்போக்கான போர்களை எதிர்க்கிறார்கள். உள் நாட்டுப் போர்களை அதாவது ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்கும் வர்க்கத்தை எதிர்த்து நடத்தும் போர்கள் அனைத்தும் முற்போக்கானவை; நீதியானவை ; தேவையானவை என்று கருதுவதன் மூலம் மார்க்சியர்கள், சமாதனவாதிகள் மற்றும் அராஜகவாதிகள் போர் குறித்துக் கொண்டிருக்கும் கருத்திலிருந்து வேறுபட்டவர்கள். சமாதானவாதிகள் போரின் வர்க்கத்தன்மையை காண மறுப்பார்கள். அராஜகவாதிகள் போரின் வர்க்கத்தன்மை பற்றி கவலைப் படமாட்டார்கள். திருத்தல்வாதிகளோ போரின் வர்க்கத்தன்மையை மூடி மறைப்பார்கள்.
இன்று காலனிய, அரைக்காலனிய, ஒடுக்கப்பட்ட நாடுகளில் மாவோ கூறியவாறு தரகுமுதலாளிய - நிலவுடமை வர்க்கங்கள் (ஜனநாயகப் புரட்சி முடிந்த, சிறிய, ஒடுக்கப்பட்ட உக்ரைன் போன்ற நாடுகளில் சார்பு முதலாளிகள்) ஏகாதிபத்திய நலன்களில் இருந்து புதிய காலனிய ஆட்சியை நடத்துகின்றன. அவை தேசியப் போர்களை ஒடுக்கும் வர்க்கங்களாகவும், சன நாயகப் புரட்சியின் இலக்குகளாகவும் (உக்ரைன் போன்ற நாடுகளில் சோசலிசப்புரட்சியின் இலக்குகளாகவும்) மாறிவிட்டன. அணி சேராக் கொள்கையை கைவிட்டு ஏகாதிபத்திய எடுபிடிகளாக மாறிவிட்டன. ஆகவே இதையும் கணக்கில்கொண்டே யுத்தம் குறித்த மார்க்சிய லெனினிய செயல்தந்திரங்களை நாம் வகுக்க வேண்டும்.
ஒரு ஏகாதிபத்திய நாடு ஒடுக்கப்பட்ட நாட்டின் மீது போர் தொடுக்கும்போது பாட்டாளி வர்க்கம் அந்த ஒடுக்கப்பட்ட நாட்டின் தேசியப் போரை அல்லது தாய் நாட்டுப் பாதுகாப்பு போரை ஆதரிக்க வேண்டும் என லெனின் கூறினார். லெனின் இங்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போர் பற்றி பேசுகிறார். ஒடுக்கப்பட்ட நாடான உக்ரைன் நாட்டின் ஆளும் வர்க்கம் நேட்டோவின் கருவியாக இருந்து கொண்டு தாய் நாட்டு பாதுகாப்பு போர் எனும் பேரில் ரசியாவுடன் போரில் ஈடுபட்டு வருகிறது. இதை நாம் ஆதரிக்க முடியுமா? நிச்சயம் முடியாது. எனவே லெனினியத்தை குறிப்பான நிலைமைகளுக்கு ஏற்ப பொருத்த வேண்டும். லெனினியத்தை வறட்டுத்தனமாக பொருத்தும் திருத்தல்வாதிகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(தொடர்ச்சி பகுதி -5 ல்)